Thursday, January 05, 2006

18.சொன்னதைச் செய்வீர்களா?

18.சொன்னதைச் செய்வீர்களா?
**********************************

ராஜபுதனத்தில் ஆன்வர் மன்னர் ஆண்டு வந்தார். இந்து மதத்தில் பக்தி அதிகமாக இருந்தாலுங்கூட உருவ வழிபாட்டின்மீது நம்பிக்கை இல்லை.

அங்கு விவேகாநந்தர் வந்தார். ஒரு நாள் அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். இந்து மதத்தின் உயர்வை அரசன் உணர்ந்திருந்தாலும் உருவ வழிபாட்டைக் கண்டித்துப் பேசினார். விவேகாநந்தர் பதிலேதும் சொல்லவில்லை.

மறுநாள், மன்னனின் படம் ஒன்றை அரண்மனைச் சுவரில் விவேகாநந்தர் பார்த்தார். விவேகாநந்தர் வந்த சேதி கேட்டு அவருக்கு மரியாதை செலுத்த அரண்மனைச் சேவகர்களும், அதிகாரிகளும் வந்தனர்.

அன்பர்களே! என்மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால் எனக்காக எதுவும் செய்வீர்கள் அல்லவா?" என விவேகாநந்தர் கேட்டார். உடனே, வந்தவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில்,"செய்வோம்" என்றனர்.

விவேகாநந்தர்,"எங்கே! என்மீது காறித் துப்புங்கள் பார்ப்போம்" என்றார். அவர்கள்,"முடியாது" என்றனர். "ஏன்?" எனக் கேட்ட விவேகாநந்தரிடம்,"நீங்கள் எங்களின் கண்கண்ட தெய்வம். அவ்வாறு செய்வது தங்களுக்கும் தங்கள் குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் செய்யும் துரோகம்" என்றனர்.

"பரவாயில்லை. மனித உருவத்துக்கு மதிப்பு கொடுக்கிறீர்கள். மனதில் உருவமும், அறிவும் இல்லாத ஒரு படத்தில் துப்புங்கள்! என்று சொன்னால் செய்வீர்களா?" என்று விவேகாநந்தர் கேட்டார். எல்லோரும் "தாராளமாக" என்றனர்.

உடனே மன்னனின் படத்தைக்காட்டி,"இதில் காறித் துப்புங்கள்" என்றார். மற்றவர்கள் துடிதுடித்துப் போய்,"அவர் அரசர். அரசரின் உருவப் படத்தை அவமதிப்பது அரசரை அவமதிப்பதற்குச் சமம். இதுகூடத் தங்களுக்குத் தெரியாதா?" என்றனர்.

"என்னிடம் சொன்னதை மன்னனிடம் சொல்லுங்கள். உருவ வழிபாட்டின் மதிப்பு அவருக்குத் தெரியட்டும்!" என்றார் விவேகாநந்தர்.

செய்திகேட்ட ஆன்வர் மன்னர் உருவ வழிபாட்டை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டார்.

0 Comments: